பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பரபரப்பு சம்பவம், எனக்கு பிறந்த குழந்தை இறந்ததால் இன்னொரு பெண்ணின் குழந்தையை கடத்தினேன் - கைதான தொழிலாளியின் மனைவி வாக்குமூலம்
எனக்கு பிறந்த குழந்தை இறந்ததால், இன்னொரு பெண்ணின் குழந்தையை கடத்தியதாக பொள்ளாச்சி குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைதான தொழிலாளியின் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நரிக்கல்பதியை சேர்ந்தவர் பாலன் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி தேவி (30). இவர்களுக்கு நித்தின் (6), பிரசாந்த் (3) என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவி 3-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 29-ந் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு தேவிக்கு குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் அவரால் சரிவர குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனை அறிந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேவியிடம் தானாக வந்து பேச்சு கொடுத்தார். அவர் தனது அண்ணனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், அவருக்கு உதவியாக வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் நீங்கள் குழந்தையுடன் தனியாக கஷ்டப்படுவதால் இரவு நேரத்தில் தங்கி உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு தேவியும் சம்மதம் தெரிவித்தார்.
தேவியையும், குழந்தையும் அவர் நன்றாக கவனித்துக்கொண்டார். இதனால் அந்த பெண் மீது தேவிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் தேவி நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அந்த பெண் அவர்களை வழியனுப்ப குழந்தையை தூக்கி சென்றார்.
இதற்கிடையில் குழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதாகவும் அதற்கு தோல் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருகிறேன். நீங்கள் மருந்து வாங்கிவிட்டு வாருங்கள் என்று கூறிவிட்டு அந்த பெண், குழந்தையுடன் சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பவரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தேவியும், பாலனும் ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. உடனடியாக குழந்தை கடத்தப்பட்டது குறித்து அங்கு உள்ளவர்களிடமும், பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண் ஆட்டோவில் ஏறி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவில் இருந்த செல்போன் எண்ணை வைத்து டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அவரை பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருப்பூர், பல்லடம், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அந்த பெண்ணை தேடினர். இந்த நிலையில் அந்த பெண் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை கைது செய்து, பச்சிளம் குழந்தையை மீட்டனர். விசாரணையில் அவர் பெயர் மாரியம்மாள் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் தேவி, பாலனிடம் ஒப்படைத்தனர்.
கணவரிடம் காண்பிப்பதற்காக...
இதுகுறித்து மாரியம்மாள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் லிங்குசாமி. இவர் குறிச்சிக்கோட்டை பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தான் கர்ப்பமானேன். இதையடுத்து பிரசவத்துக்காக கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கு கடந்த 24-ந் தேதி குறைபிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் நான் மிகவும் மனமுடைந்தேன்.
இதனை அறிந்தால் கணவர் வருத்தப்படுவார் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததை மறைத்து விட்டேன். மேலும் என்னுடைய கணவர் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பதால் தற்போது நாள், நட்சத்திரம் சரியில்லை. நானே வீட்டிற்கு குழந்தையை அழைத்து வருகிறேன். அதன் பின்னர் நீங்கள் குழந்தையை பார்க்கலாம் என்று கூறிவிட்டேன். கணவரிடம் எப்படியாவது குழந்தையை காட்டவேண்டும் என்பதால் குழந்தையை கடத்த திட்டமிட்டேன்.
அதன்படி சம்பவத்தன்று பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு யாருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது என்று கண்காணித்தேன். அப்போது தேவி என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வது போல நடித்தேன். பின்னர் குழந்தையை கடத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன்.
இந்த நிலையில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு புறப்படும்போது குழந்தையின் பெற்றோரின் கவனத்தை திசைதிருப்பி குழந்தையை கடத்திவிட்டு, அங்கிருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு வந்தேன். அங்கிருந்து நேராக குறிச்சிக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து விட்டேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மாரியம்மாளை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவையில் சிறையில் அடைத்தனர். குழந்தை கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு, குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பாராட்டினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டும் இதைபோல் பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் போலீசாரின் தீவிர முயற்சியில் குழந்தை மீட்கப்பட்டது. எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்களிடம் தங்கள் குழந்தைகளை கொடுக்க வேண்டாம்.
குழந்தைகளை குளிக்க எடுத்து செல்வது, மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து செல்வது என்று கூறி வரும் முன்பின் தெரியாதவர்களிடம் குழந்தையை கொடுக்க வேண்டாம். குழந்தைகளை பெற்றோர்கள் தான் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
Related Tags :
Next Story