கிருஷ்ணகிரி அணையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே தெரிந்த ஊஞ்சல் தூண்கள் பொதுமக்கள் பார்த்து சென்றனர்


கிருஷ்ணகிரி அணையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே தெரிந்த ஊஞ்சல் தூண்கள் பொதுமக்கள் பார்த்து சென்றனர்
x
தினத்தந்தி 7 May 2019 3:00 AM IST (Updated: 7 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே தெரிந்த ஊஞ்சல் தூண்களை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து சென்றனர்.

கிருஷ்ணகிரி,

கடந்த ஆண்டு முதல் பருவ மழை ஏமாற்றியதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அணையின் மேற்கு பகுதியில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு அணையின் மேற்கு பகுதியில் உள்ள பழைய பேயனப்பள்ளி கிராம மக்கள் மண்டு மாரியம்மன் கோவிலை கட்டி அதன் முன் பகுதியில் சாமியை தாலாட்ட 30 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன இரண்டு ஊஞ்சல் தூண்களையும் அமைத்திருந்தனர். இப்பகுதியை சுற்றி இருந்த கிராம மக்கள் ஒன்று கூடி திருவிழா நடத்தி அம்மனை ஊஞ்சலில் தாலாட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 1952-ல், இக்கோவில் உள்ள நிலப்பகுதி உள்பட பல ஏக்கர் நிலங்களை அணை கட்ட அரசு கையப்படுத்திக் கொண்டது. இங்கு அணையை கட்டி நீர் தேக்கிய பிறகு மண்டு மாரியம்மன் கோவில் பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது. சிறிய கருங்கல்லைக் கொண்டு கட்டிய கோவில் கட்டிடம் நாளடைவில் தண்ணீரில் சிதிலமடைந்து காணாமல் போனது.

ஆனால் பெரிய கருங்கல்லைக் கொண்டு அமைக்கப்பட்ட இரண்டு ஊஞ்சல் தூண்கள் மட்டும் இன்றும் அப்படியே கம்பீரமாக நிற்கிறது. 40 ஆண்டுகளாக அணையில் தண்ணீர் இருந்ததால் பார்க்க முடியாமல் இருந்த ஊஞ்சல் தூண்கள் தற்போது அணை வறண்டதால் முழுமையாக வெளியே தெரிகிறது.

இதை கேள்விப்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அணைக்கு திரண்டு வந்து ஊஞ்சல் தூண்களை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

Next Story