கோதண்டராமர் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல்
கோதண்டராமர் சிலையை பெங்களூரு நோக்கி கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில், நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெரிய லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் பல பிரச்சினைகளை சந்தித்து, கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு சிலையுடன் கூடிய லாரி வந்தது.
பின்னர் லாரி டயர்கள் வெடிப்பு பிரச்சினையாலும் மற்றும் லாரி செல்வதற்காக தற்காலிக மண் சாலை, பாலம் ஆகியவை அமைக்க வேண்டியும் 3 மாத காலம் கோதண்டராமர் சிலை, சாமல்பள்ளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் தற்்காலிக பாலம் மற்றும் மண் பாதை அமைக்கப்பட்டு கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை அங்கிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ஆனால், சிறிது தூரம் சென்றவுடன் மீண்டும் லாரி டயர்கள் பஞ்சர் ஆனதால், அதை சரி செய்வதற்காக அன்று இரவு இம்மிடிநாயக்கனபள்ளி என்ற இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது.
பின்னர் அங்கிருந்து சிலை புறப்பட்ட நிலையில், சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாத காரணத்தால் லாரி சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மண் சாலையை சமப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த பணி முடிவடைந்த போதிலும், திடீரென சிலை ஏற்பாட்டாளர்களுக்கும், சிலையை கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிலையை பெங்களூரு நோக்கி கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முழுவதும் கோதண்டராமர் சிலை, சின்னாரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சிலையை ஏராளமான பொதுமக்கள் நேரில் தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனிடையே சிலை ஏற்பாட்டாளர்கள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குமிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்டு, இன்னும் ஓரிரு நாளில் சிலை சின்னாரிலிருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story