கூடலூரில், தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் - இழப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதி


கூடலூரில், தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் - இழப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தோட்டங்களில் புகுந்து காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கூடலூர்,

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணையும் தமிழக பகுதியில் கூடலூர் உள்ளது. இந்த 3 மாநிலங்களின் எல்லைகளில் முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா ஆகிய சரணாலயங்கள் இருக்கின்றன. இவை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக உள்ளதால், காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் புகலிடமாகவும் விளங்குகிறது. இதனால் கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

கூடலூர் நகராட்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில் அள்ளூர்வயல், தொரப்பள்ளி, குனில் மற்றும் தேவர்சோலை பேரூராட்சி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் உள்ளன. இதுதவிர புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் முதுமலை ஊராட்சி உள்ளது. இங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் வாழை, பாக்கு, தென்னை உள்பட பல்வேறு காய்கறி விவசாயத்திலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. பின்னர் அங்குள்ள தோட்டங்களில் பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மனித-வனவிலங்கு மோதல் தொடர்கிறது. முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் விவசாய பயிர்களை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொரப்பள்ளி, குனில், ஏச்சம்வயல் மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஆகிய ஊராட்சி பகுதிகளில் காட்டுயானைகள் தினமும் புகுந்து பயிர்களை தின்று வருகின்றன. இதற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் வனத்துறையிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி பல்வேறு போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெறும்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கும் இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக வருவாய் மற்றும் வனத்துறையிடம் கேட்டாலும் சரிவர விளக்கம் அளிப்பது இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குனில் பகுதியை சேர்ந்த விவசாயி சுனீல் கூறியதாவது:-

முதுமலையில் இருந்து தினமும் காட்டுயானைகள் வெளியேறி கிராமங்களுக்கு வருகின்றன. மேலும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. காட்டுயானைகள் வருகையை தடுக்க வேண்டும் என்று சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போது காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க தொங்கும் சூரிய சக்தி மின்வேலி முதுமலை கரையோரம் அமைக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

ஆனால் கூடலூர் தொரப்பள்ளியில் இருந்து நெல்லிக்கரை வழியாக போஸ்பாராவுக்கு செல்லும் 10 கிலோ மீட்டர் தூரம் தொங்கும் மின்வேலி அமைக்க வேண்டும். இதில் தொரப்பள்ளி முதல் நெல்லிக்கரை வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டுமே வனத்துறையினர் தொங்கும் மின்வேலி அமைத்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 8½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இதுவரை மின்வேலி அமைக்கப்படவில்லை. இதனால் மின்வேலி இல்லாத இடங்கள் வழியாக காட்டுயானைகள் வந்து அட்டகாசம் செய்கின்றன.

மேலும் இதுவரை சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறை இழப்பீடு தரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் உரிய ஆவணங்களை வனத்துறையிடம் வழங்கியும் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. ஆனால் வாக்குறுதி அளித்தபடி வனத்துறையினரும் நடவடிக்கை எடுப்பது இல்லை.

சூரிய சக்தி மின்வேலி விரைவாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் போதிய நிதி இல்லை என வனத்துறையினர் பதில் அளிக்கின்றனர். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் தருவது இல்லை. காட்டுயானைகள் வருகையை தடுப்பதும் இல்லை. எனவே விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏச்சம்வயல் பகுதியை சேர்ந்த மரியம்மா கூறியதாவது:-

காட்டுயானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால் கடந்த ஆண்டு எனக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. வருவாய் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கூறினர். இதன்படி முறையான ஆவணங்களை கொடுத்தேன். ஆனால் எந்தவித இழப்பீடு தொகையும் கிடைக்கவில்லை.

காட்டுயானைகள் வருகையை கட்டுப்படுத்துவதற்காக சூரிய சக்தி மின்வேலி பொருத்துவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே சிறிது தூரம் மின்வேலி பொருத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக காட்டுயானைகள் ஏச்சம்வயல் பகுதிக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை வேருடன் சாய்த்து போட்டு சேதப்படுத்தி வருகின்றன. பல ஆண்டுகளாக பாதுகாத்து பராமரித்த பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. அழியும் நிலையில் உள்ள விவசாயத்தை பாதுகாக்க வனத்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்டக்குன்னு பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்த கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு 2 ஆயிரம் வாழைகள் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தேன். பல மாதங்களுக்கு பிறகு வாழைத்தார்கள் விளைய தொடங்கியது. இதனால் ஓணம் பண்டிகைக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்டு இருந்த வேளையில் இரவோடு, இரவாக காட்டுயானைகள் எனது நிலத்துக்குள் புகுந்து 1000 வாழைகளை நாசம் செய்தன.

இதுகுறித்து வருவாய், வனத்துறையிடம் முறையிட்டேன். சம்பந்தப்பட்ட அலுவலர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். 1000 வாழைகள் சேதம் அடைந்த நிலையில் 750 வாழைகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக அலுவலர்கள் கணக்கெடுத்தனர். காட்டுயானைகளால் சேதம் அடைந்த வாழைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். ஆனால் அலுவலர்கள் ரூ.84 ஆயிரம் மட்டுமே தொகை நிர்ணயித்து இருந்தனர்.

பின்னர் இழப்பீடு தொகை வழங்குவதாக கூறி விட்டு சென்றனர். ஆனால் இதுவரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக வனத்துறையினரை நேரில் சந்தித்து வருகிறேன். அரசிடம் இருந்து போதிய நிதி வரவில்லை. எனவே வந்தவுடன் வழங்கப்படும் என கூறி வருகின்றனர். இனி வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக இழப்பீடு தொகையை வழங்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முதுமலை ஊராட்சியை சேர்ந்த விவசாயி சுரேஷ் கூறியதாவது:-

மண்டக்கரை, நாகம்பள்ளி, புலியாளம், முதுகுளி உள்பட பல்வேறு கிராமங்களில் காட்டுயானைகளால் சுமார் 30 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 10 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. புலிகள் காப்பக வனப்பகுதியில் பலதலைமுறைகளாக வசிக்கும் விவசாயிகளின் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும். புலிகள் காப்பக திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? என தெரியவில்லை.

வனத்துறையிடம் கேட்டால் நிதி இல்லை என பதில் அளிக்கின்றனர். யானை சவாரி, வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை வாகனத்தில் அழைத்து செல்லும் சவாரி மட்டுமின்றி விருந்தினர் மாளிகைகளில் இருந்தும் வனத்துறைக்கு தினமும் வருமானம் கிடைக்கிறது. விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள வாழைகளை காட்டுயானைகள் தின்று சேதப்படுத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கு மட்டும் வனத்துறையினர் தாமதம் செய்து வருகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story