தோட்டத்தில் மதுபானம் குடித்ததை கண்டித்ததால், பிராந்தி பாட்டிலால் குத்தி வனக்காவலர் படுகொலை
தோட்டத்தில் மதுபானம் குடித்ததை கண்டித்ததால் பிராந்தி பாட்டிலால் குத்தி வனக்காவலர் படுகொலை செய்யப்பட்டார்.
கொடைரோடு,
கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர், சிறுமலை வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சிறுமலை அடிவாரத்தில் மாவூர் அணை அருகே தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மாமரங்களும், தென்னை மரங்களும் உள்ளன.
நேற்று மாலை இவர், தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் மரத்தடி நிழலில் அமர்ந்து மதுபானம் குடித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட ராஜேந்திரன் அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், ராஜேந்திரனை பாட்டிலால் தலையில் தாக்கினர்.
பின்னர் அவர்கள் பிராந்தி பாட்டிலால் ராஜேந்திரனை சரமாரியாக குத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடினார். இருப்பினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், விடாமல் துரத்தி பாட்டில்களால் சரமாரியாக ராஜேந்திரனை குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர், தோட்டத்தில் இருந்து சிறிதுதூரத்தில் உள்ள மாவூர் அணை செல்லும் சாலையில் பரிதாபமாக இறந்தார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பால குமார், இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த இவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மது பானம் குடித்ததை கண்டித்ததால் ராஜேந்திரன் குத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில், கேழையாடு வேட்டையாடிய வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜேந்திரன் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
Related Tags :
Next Story