சாட்சியை மிரட்டிய வழக்கில் ஷயான், மனோஜ் கோர்ட்டில் ஆஜர்
சாட்சியை மிரட்டிய வழக்கில் ஷயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஷயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஷயான், மனோஜ் ஆகியோர் கொலை சம்பவம் நடந்தபோது, ஊட்டியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். கோடநாடு வழக்கில் அந்த விடுதி உரிமையாளர் சாந்தாவை போலீசார் சாட்சியாக சேர்த்தனர். இதையடுத்து சாந்தாவை ஷயான், மனோஜ் ஆகியோர் மிரட்டியதாக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் ஷயான், மனோஜ் ஆகியோர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாட்சியை மிரட்டிய வழக்கு ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ஷயான், மனோஜ் ஆகியோரை போலீசார் அழைத்து வந்து, குற்றவியல் நடுவர் செந்தில்குமார் ராஜவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு அவர் தள்ளி வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஷயான், மனோஜ் ஆகியோரை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story