குழந்தைகள் விற்பனை வழக்கு: கொல்லிமலை நர்சுகள் உள்பட 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


குழந்தைகள் விற்பனை வழக்கு: கொல்லிமலை நர்சுகள் உள்பட 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 May 2019 3:30 AM IST (Updated: 7 May 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் விற்பனை வழக்கில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொல்லிமலை நர்சுகள் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தினர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் 14 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இவ்வழக்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக இந்த வழக்கில் புகார் அளித்த நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமாரிடம் ஏற்கனவே சேலத்தில் சுமார் 3 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இந்த வழக்கின் மேற்பார்வையாளராக சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் நாமக்கல்லில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இந்த குழுவினர் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சித பிரியாவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் சுஜாதா, கற்பகம், மணிகண்டன், சாரதி ஆகியோரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் 3 நர்சுகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முன்னதாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் அலுவலகத்திற்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் குழந்தைகள் பிறப்பு பதிவேடு மற்றும் பல்வேறு விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை பெற்று வந்தனர்.

குழந்தைகள் விற்பனை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story