மூலைக்கரைப்பட்டி அருகே பயங்கரம்: விவசாயி அடித்துக்கொலை தந்தை-மகனுக்கு வலைவீச்சு


மூலைக்கரைப்பட்டி அருகே பயங்கரம்: விவசாயி அடித்துக்கொலை தந்தை-மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-07T01:41:06+05:30)

மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேவகன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் வீரபெருமாள் (வயது 35), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு வீரபெருமாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், மூலைக்கரைப்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர் அகஸ்டா சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் டைகர் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. போலீசாரின் விசாரணையில், வீரபெருமாளுக்கும், அதே ஊரை சேர்ந்த உறவினரான சுப்பிரமணிக்கும் (60) இடையே முன்விரோதம் இருந்ததும், இதனால் சுப்பிரமணி, அவருடைய மகன் ஆறுமுகநயினார் (28) ஆகியோர் சேர்ந்து வீரபெருமாளை தலையில் கடப்பாரையால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கொலையுண்ட வீரபெருமாளின் அண்ணன் மதியழகன் (40). இவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவருடைய மனைவி பார்வதி (38). இவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இதனால் பார்வதி தனது கணவருக்கு தெரியாமல் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பே சுப்பிரமணியிடம் ரூ.2 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொடுத்து உள்ளார்.

இதுபற்றி மதியழகனுக்கு தெரியவரவே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பார்வதி, மதியழகனை பிரிந்தும் வசித்து உள்ளார். மேலும் மதியழகன், வீரபெருமாள் ஆகியோர் சுப்பிரமணியிடம் அந்த பணம், நகையை திருப்பி தருமாறு கேட்டு உள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் மதியழகன் தரப்பினர் சுப்பிரமணியிடம் பணம், நகையை கேட்டு உள்ளனர். அப்போது பார்வதியிடம் இருந்து நான் பணம், நகை எதுவும் வாங்கவில்லை என்று சுப்பிரமணி மறுத்தார். இதுதொடர்பாக மதியழகனுக்கும், அவருடைய மனைவி பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பார்வதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் வீரபெருமாள் விவரம் தெரிந்தவர் என்றும், அவரை உயிரோடு விட்டால் பிரச்சினைக்கு தீர்வு வராது என்று கருதி அவரை தீர்த்துக்கட்ட சுப்பிரமணியும், அவருடைய மகன் ஆறுமுகநயினாரும் திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு அங்கு படுத்து தூங்கிய வீரபெருமாளை இருவரும் சேர்ந்து கடப்பாரையால் தலையில் அடித்துக் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து போலீசார் வீரபெருமாளின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுப்பிரமணி, ஆறுமுகநயினார் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட வீரபெருமாளுக்கு செல்வி (30) என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும், மாலதி என்ற மகளும் உள்ளனர்.

Next Story