புதுச்சத்திரம் அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
புதுச்சத்திரம் அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
புதுச்சத்திரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மனுக்கள் போடும் பெட்டியில் மனு ஒன்றை போட்டு சென்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் தினசரி பயன்படுத்த கூடிய ராமநாயக்கன்பட்டி முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகில் மதுபான கடை நிறுவப்பட இருப்பதாக அறிகிறோம். இதனால் ராமநாயக்கன்பட்டி, கடந்தப்பட்டி, பாச்சல், குள்ளநாயக்கன்பட்டி, கதிராநல்லூர், முருங்கைப்பட்டி மற்றும் பொடேரிப்பட்டி கிராம மக்கள் கடும் பாதிப்பை அடைவார்கள்.
இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் பாச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 400 மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
பெரும்பாலும் எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாய தொழில் அல்லது நெசவு தொழிலையே நம்பி உள்ளனர். அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ரூ.250 மட்டுமே கூலியாக பெற்று வருகின்றனர். இங்கு மதுபான கடை அமைவதாக இருந்தால் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
எங்கள் பகுதியில் அரசு மதுபான கடை நிறுவி அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதாக இருந்தால், இதற்கு மாற்று ஏற்பாடாக இந்த அரசுக்காக எங்கள் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் விட்டு கொடுக்க தயாராக உள்ளோம். எனவே எங்கள் பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க மாவட்ட கலெக்டர் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story