துறையூர் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தல்


துறையூர் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-07T02:24:13+05:30)

துறையூர் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர், 

துறையூர் அருகே அய்யாறு, குண்டாறு மற்றும் அதன் கரையோரங்களிலும், அதனையொட்டிய பகுதிகளிலும் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலை தடுக்க அதிகாரிகள் சென்றால் முன்கூட்டியே தகவல் அறிந்து மணல் கடத்தல்காரர்கள் தப்பி விடுகின்றனர்.

மணல் கடத்தல்காரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மணல் அள்ளுவதால் ஆற்றில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கரைகளை உடைத்துள்ளனர். தொடர் மணல் கடத்தலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வறட்சி நிலவுகிறது. அதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மணல் கடத்தலை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் இரவு, பகலாக மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. மணல் கடத்தல் பற்றி புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் புகார் தெரிவிப்பவரின் விவரம் உடனடியாக மணல் கடத்தல்காரர்களுக்கு தெரிந்து விடுகிறது.

அதுமட்டுமின்றி புகார் கொடுத்த சில மணி நேரங்களில் புகார்தாரர்களுக்கு மணல் கடத்தல்காரர்களிடம் இருந்து கொலைமிரட்டல் வருகிறது. அதோடுமட்டுமல்லாமல் தாக்கப்படுகிறார்கள். இதனால் புகார் செய்ய பலர் தயங்குகிறார்கள். மணல் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தால், அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் மணல் கடத்தல் சம்பந்தமான வழக்கு ஒன்றில் மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தது. எனவே துறையூர் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story