சேலத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவிகளின் ‘ஹால் டிக்கெட்’ திருட்டு; பட்டதாரி வாலிபர் கைது
சேலத்துக்கு ‘நீட்‘ தேர்வு எழுத வந்த மாணவிகளின் ‘ஹால் டிக்கெட்டை‘ திருடிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். இதனை 30 நிமிடங்களில் மீட்டு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
சேலம்,
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ‘நீட்‘ தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக தர்மபுரி மாவட்டம் பச்சனாம்பட்டியை சேர்ந்த 2 மாணவிகள் சேலத்துக்கு தங்களது பெற்றோருடன் வந்தனர்.
பஸ் மூலம் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கு தனது கைப்பைகளை கீழே வைத்துவிட்டு அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களுடைய கைப்பைகளை மர்ம ஆசாமி நைசாக திருடி விட்டார். இந்த பைகளில் தான் மாணவிகளின் ‘ஹால் டிக்கெட்‘ மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவை இருந்ததால் அந்த மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஒரு மாணவியின் தந்தை வெங்கடேசன் (வயது 49) இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக பஸ்நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகளின் கைப்பைகளுடன் திருப்பூர் பஸ் நிற்கும் இடத்தில் அந்த ஆசாமி நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார்(26) என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கைப்பைகளை பறிமுதல் செய்து மாணவிகளிடம் ஒப்படைத்தனர்.
இதில் துரிதமாக செயல்பட்டு 30 நிமிடங்களிலேயே ஹால் டிக்கெட்டை மீட்டு கொடுத்து தேர்வு எழுத உதவிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அயூப்கானுக்கு மாணவிகள் கண்ணீர் மல்க நன்றி கூறினர். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரும் பாராட்டி பரிசு வழங்கினார்.
Related Tags :
Next Story