போலீஸ்காரரை கண்டித்து, மகனுடன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி - பண்ருட்டியில் பரபரப்பு


போலீஸ்காரரை கண்டித்து, மகனுடன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி - பண்ருட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 May 2019 10:15 PM GMT (Updated: 6 May 2019 11:46 PM GMT)

பண்ருட்டியில் போலீஸ்காரரை கண்டித்து ஆட்டோ டிரைவர் மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பண்ருட்டி,

பண்ருட்டியை அடுத்த கோட்டலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரிபாஸ் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் நேற்று காலை 11:30 மணிக்கு புதுப்பேட்டையில் இருந்து சவாரி ஏற்றிக் கொண்டு பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, விட்டு மீண்டும் புதுப்பேட்டைக்கு புறப்பட்டார். அப்போது ஆட்டோவை ஹரிபாசுடன் வந்திருந்த அவரது மகன் சச்சின் டிராவிட் (19) ஓட்டி சென்றார்.

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகே சென்ற போது, அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியிலிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மணிவண்ணன் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது சச்சின் டிராவிட் ஆட்டோ ஓட்டி வந்ததால், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று கேட்டார்.

ஆனால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆட்டோவை பண்ருட்டியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அப்போது ஹரிபாசுக்கும் போலீஸ்காரர் மணிவண்ணனுக்கும் இடை யே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென்று ஹரிபாஸ், ஆட்டோவில் இருந்த டீசல் கேனை எடுத்து, அதில் இருந்த டீசலை தன் மீதும், சச்சின் டிராவிட் மீதும் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரரை கண்டித்து ஆட்டோ டிரைவர் மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story