வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி போலி விசா கொடுத்து ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது


வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி போலி விசா கொடுத்து ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 7 May 2019 5:08 PM GMT)

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பவதாக கூறி போலி விசா கொடுத்து ரூ.1 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை தொண்டி ரோடு சீனிவாச நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 49). இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பினார். அதற்காக அவர் திருப்புவனத்தை அடுத்த பிரமனூர் கிராமத்தை சேர்ந்த முனீஸ் என்ற முனீஸ்வரனை (39) தொடர்பு கொண்டாராம். இதையடுத்து அவர், போலந்து நாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய கர்ணன் கடந்த 2018–ம் ஆண்டு 2 தவணையாக ரூ.3 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக்கொண்ட முனீஸ்வரன் பேசியபடி கர்ணனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லையாம், மேலும் வாங்கிய பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை என தெரிகிறது.

மோசடி செய்யப்பட்டதை அறிந்த கர்ணன், அதுபற்றி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அரசு உரிமம் பெறாமல் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியதாக முனீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதை அறிந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி பகுதிகளை சேர்ந்த பலர், சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் முனீஸ்வரன் ஏற்கனவே கொரியா, கம்போடியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் ரூ.1 கோடி வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். பணம் கொடுத்தவர்களில் சிலருக்கு போலி விசா கொடுத்ததாகவும், அந்த போலி விசாவில் கம்போடியா நாட்டிற்கு சென்ற 3 பேர் அங்கிருந்து திரும்பி வரமுடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் இருப்பதாக கூறி தங்களை மீட்க கோரி வாட்ஸ்–அப் மூலமாக தகவல் அனுப்பி இருந்ததாக கூறியிருந்தனர்.


Next Story