சாலை விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தகவல்


சாலை விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தகவல்
x
தினத்தந்தி 7 May 2019 10:15 PM GMT (Updated: 7 May 2019 5:08 PM GMT)

சாலை விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2017–ம் ஆண்டு நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 297 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு 246 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நடந்த விபத்துகளில் 65 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் விபத்தில் 84 பேர் இறந்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டை காட்டிலும் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். இந்த எண்ணிக்கையையும் கணிசமாக குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி சாலை பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.65 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள், இணைப்பு சாலைகள், குறுக்கு சாலைகள் உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் ரூ.35 லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வேகத்தடைகள் அமைக்கப்படும்.

இதற்காக மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் கடந்த காலங்களில் அதிகம் விபத்து நடைபெற்ற இடங்கள் என 160 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் ஆராய்ந்து தேவையான இடங்களில் விதிகளின்படி வேகத்தடைகள் அமைப்பார்கள். இதுதவிர ரூ.30 லட்சம் செலவில் மாவட்ட காவல் நிர்வாகத்தின் சார்பில் சாலைகளில் எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள், வாகனங்களின் வேக அளவினை கணக்கிடும் கருவிகள், எச்சரிக்கை உபகரணங்கள் வாங்கப்படும்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் மாவட்டத்தில் விபத்துகளை குறைத்து அதன்மூலம் பலியாவோரின் எண்ணிக்கையையும் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த அவர் கூறினார்.


Next Story