தோழியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது


தோழியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 May 2019 5:00 AM IST (Updated: 7 May 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

தோழியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம்,

தாராபுரம் இறைச்சிமஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் காளிமுத்து என்ற திருமாவளவன் (வயது 19). தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். இந்த நிலையில் காமராஜபுரத்தை சேர்ந்த சில பெண்கள் இவருடன் நட்பாக பழகி வந்துள்ளனர். அடிக்கடி நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதை கொண்டாடுவதற்காக, அந்த பெண்ணின் உறவுக்கார பெண்கள் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு திருமாவளவன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில பெண்களுடன் சேர்ந்து அவர் செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அவருடன் நட்புடன் பழகி வந்த சில பெண்கள், எதார்த்தமாக அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதன் பிறகு திருமாவளவன் செல்பி எடுத்த புகைப்படத்தில், ஒரு பெண்ணின் புகைப்படத்தை மட்டும் பிரித்து எடுத்து, அதை சமூக வலைதளத்தில் புகைப்படத்தையும், அதன் கீழே தகாத வார்த்தைகளையும் சேர்த்து, தவறான முறையில் நண்பர்கள் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண், திருமாவளவனிடம் சென்று கேட்டபோது. அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசி, அவரை திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 20–ந்தேதி புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து திருமாவளவன் தலைமறைவாகி விட்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் திருமாவளவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் தாராபுரம் பஸ் நிலையம் அருகே நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று திருமாவளவனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருப்பது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story