கூடலூரில் விபத்து: தமிழக– கர்நாடகா பஸ்கள் மோதி 26 பேர் காயம் அதிக வேகத்தில் ஓட்டியதாக பயணிகள் புகார்
தமிழக– கர்நாடகா பஸ்கள் மோதி 26 பேர் காயம் அடைந்தனர். அதிக வேகத்தில் பஸ்சை ஓட்டியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ் நேற்று காலை 10.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மசினகுடியை சேர்ந்த டிரைவர் ஜலீல் (வயது 49) என்பவர் ஓட்டினார். கூடலூர் தொரப்பள்ளி பஜாரை கடந்து பயணிகளுடன் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது ஊட்டியில் இருந்து மைசூரூ நோக்கி சென்ற கர்நாடகா அரசு பஸ் மீது தமிழக பஸ் திடீரென மோதியது.
இதில் தமிழக டிரைவர் ஜலீல், மைசூரை சேர்ந்த பஸ் டிரைவர் பண்ணாரி (வயது 57), சுனில் மகள் ருத்திகா (6), குண்டல்பேட் குடலி பகுதியை சேர்ந்த பசவம்மா (67) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் ஆந்திராவை சேர்ந்த சவரன் (37), கூடலூர் முரளிதரன் (59), மசினகுடி சியாமளா தேவி (54), வில்லியம் ஜேம்ஸ் (61), குண்டல்பேட் பசுவண்ணன் (65), பொக்காபுரம் மகேஷ்வரி (30), அருவங்காடு மனோகரன் (38), மசினகுடி சுமதி (34), வாழைத்தோட்டம் சித்ரா (30), மசினகுடி விஜயா (25), நதியா (19), அப்துல் ஹக்கீம் (41), சுசீலா, பொக்காபுரம் சிவம்மா (33) உள்பட 22 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்தில் மொத்தம் 26 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை போலீசார், பொதுமக்கள் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக டிரைவர் ஜலீல் பெருந்தல்மன்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். பசவம்மா, ருத்திகா, மைசூரூ பஸ் டிரைவர் பண்ணாரி ஆகியோர் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே தமிழக– கர்நாடகா பஸ்களால் ஏற்பட்ட விபத்து காரணமாக கூடலூர்– மைசூரூ இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சேதம் அடைந்த பஸ்களை போலீசார் அங்கிருந்து அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தாசில்தார் ரவி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விசுவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே பலத்த காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் கூறியதாவது:–
பொக்காபுரம், மசினகுடி பகுதியை சேர்ந்த பயணிகள் சுமார் 50 பேர் கூடலூருக்கு வருவதற்காக பஸ்சில் அமர்ந்து இருந்தோம். அதிக வேகத்தில் பஸ்சை டிரைவர் இயக்கி வந்தார். இதனால் பயத்தில் வந்து கொண்டிருந்த சமயத்தில் முதுமலை தெப்பக்காடு பகுதியில் வந்த போது மற்றொரு பஸ் மீது மோதுவது போல் சென்றது. இருப்பினும் பஸ்சின் வேகத்தை டிரைவர் கட்டுப்படுத்த வில்லை.
ஆனால் கூடலூர் தொரப்பள்ளியில் வந்த போது பஸ்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கர்நாடகா அரசு பஸ் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் சாலையோரம் பள்ளத்தில் இறங்கியவாறு நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து முடிந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் கூடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.