தேர்தல் அலுவலர்களுக்கு, வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பான பயிற்சி 17-ந் தேதி நடக்கிறது
தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பான பயிற்சி வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
பெரம்பலூர்,
வாக்குச்சாவடி மையங் களில் பதிவான வாக்குகளை எண்ணும் நடைமுறைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்ச நல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப் பாட்டுக்கருவி, விவிபேட் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 23-ந் தேதி அன்று எண்ணப்பட உள்ளது. அதன்படி தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடைபெற உள்ளது. மேலும் இவ்வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது.
இவ்வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப் பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 பேர் ஈடுபட உள்ளனர். அதன்படி தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் அவர் களுக்குண்டான சட்டமன்ற தொகுதி மற்றும் மேஜை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்பு வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
மேலும் ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரத்தினை அறிவிப்பு பலகையில் எழுதப்படும். இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர்- முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும் இவ்விபரங்கள் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ஜெயினுலாபுதீன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கீதாலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் தெய்வேந்திரன் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story