குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 7 May 2019 5:34 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை, 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லாங்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாடுகளுக்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஒன்று திரண்டு வேப்பந்தட்டை- கள்ளக்குறிச்சி சாலையில் பில்லாங்குளம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் மற்றும் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பில்லாங்குளம் கிராமத்தில் பழுதடைந்துள்ள அடிபம்புகளை அகற்றி மின் மோட்டார் வைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

ஏரியில் புதிய ஆழ்குழாய் அமைத்து தர வேண்டும். ஏற்கனவே உள்ள குடிநீர் கிணற்றை ஆழப்படுத்த வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வேப்பந்தட்டை கள்ளக் குறிச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story