திருச்சியில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை, என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கைது


திருச்சியில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை, என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-07T23:04:48+05:30)

திருச்சியில் நிலத்தகராறுகாரணமாக டீ மாஸ்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையம் குளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் அப்பாவு என்கிற வீரமலை (வயது 47). இவர் விமானநிலைய பகுதியில் ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்பாவுவின் தம்பி சந்தானம் (43). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். பழனியாண்டியின் சகோதரர் பொன்னுசாமி. இவர்களும், அதே பகுதியை சேர்ந்த பட்டாபிராமனின் மகன்களான சந்தானம் (45), பாலமுருகன் (21) ஆகியோரும் உறவினர்கள் ஆவார்கள். பழனியாண்டி, பொன்னுசாமி குடும்பத்தினருக்கும், பட்டாபிராமனின் மகன்களுக்கும் இடையே காலி இடம் தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு அந்த நிலத்தின் அருகே பொன்னுசாமி, பழனியாண்டி மற்றும் அவரது மகன்கள் அப்பாவு, சந்தானம் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது பட்டாபிராமனின் மகன்கள் சந்தானம், பாலமுருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். நிலத்தகராறு தொடர்பாக கெட்டவார்த்தையால் திட்டி அரிவாளால் பொன்னுசாமி, அப்பாவு, சந்தானம் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அவர்கள் தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் அப்பாவு பரிதாபமாக நேற்று காலை இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமானநிலைய போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விமானநிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தானம், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான பாலமுருகன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சந்தானம் பால் வியாபாரம் செய்து வருகிறார். திருச்சி அரசு மருத்துவமனையில் அப்பாவுவின் உடல் பிரேத பரிசோதனை நடந்த போது அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு நின்றனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக கொலையாளிகளை கைது செய்ய போலீசாரிடம் அங்கிருந்தவர்கள் வலியுறுத்தியதால் பிரேத பரிசோதனை கூடம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அப்பாவுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதனை பெற்று சென்றனர். நிலத்தகராறில் டீ மாஸ்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் விமானநிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story