திண்டிவனம் அருகே ரூ.26½ லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது, மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனம் அருகே ரூ.26½ லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது, மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-07T23:47:35+05:30)

திண்டிவனம் அருகே ரூ.26½ லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமானுஜம் (வயது 37). இவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், தான் குடியிருக்கும் தெருவில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தனுசு என்பவருடைய மனைவி லட்சுமி (வயது 50). இவர் புதியதாக லாரி ஒன்றை வாங்க விலை பேசியதாகவும், அவர் தன்னிடம் வந்து கடனாக பணம் தரும்படி கேட்டார். லட்சுமி, அவரது கணவர் தனுசு (54) ஆகியோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், சொத்துக்கள் அதிகமாக உள்ளதாலும் ஒரே தெருவில் இருப்பதாலும் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தன்னிடம் இருந்த ரூ.3½ லட்சம் மற்றும் தனக்கு தெரிந்த சிலரிடம் கடனாக பெற்று மொத்தம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரத்தை லட்சுமியிடம் கொடுத்தேன்.

பணத்தை பெற்ற அவர், விரைவில் தனது குடும்ப சொத்துக்களை பாகம் பிரித்தவுடன் வீட்டுமனைகளாக போட்டு விற்பனை செய்து கடனை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் இதுநாள் வரையிலும் பணத்தை கொடுக்கவில்லை.

இதனிடையே லட்சுமி திடீரென தலைமறைவாகி விட்டார். இதுசம்பந்தமாக நான் லட்சுமியின் கணவர் தனுசிடம் சென்று கேட்டதற்கு கடன் கொடுத்த விவரத்தை தந்தால் பணத்தை திருப்பி தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறிய அவர், தற்போது பணத்தை திருப்பிக்கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றார். எனவே அவர்கள் 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் லட்சுமி, அவரது கணவர் தனுசு ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திண்டிவனம் எண்டியூரில் இருந்து தனுசு வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி, சப்–இன்ஸ்பெக்டர்கள் அசோகன், நேவிஸ்அந்தோணிரோஸி மற்றும் போலீசார் திண்டிவனத்திற்கு விரைந்து சென்று தனுசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திண்டிவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தனுசுவின் மனைவி லட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story