கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த நல்லபாம்பு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் நல்லபாம்பு புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரிவு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்துக்கு அருகில் சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பாம்பு ஒன்று புகுந்து சென்றது.
இதை குழந்தைகள் பிரிவு கட்டிடத்துக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் பார்த்தார். உடன் அவர் பாம்பு... பாம்பு... என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் அருகில் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். ஆனால் அந்த பாம்பை காணவில்லை. இருப்பினும் இது பற்றி பாம்பு பிடிக்கும் வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அந்த பாம்பை நாலாபுறமும் தேடினார்.
ஆனால் பாம்பு கிடைக்கவில்லை. அப்போது பூங்கா அருகில் கழிவுநீர் தொட்டி இருந்தது. அதில் சிறிய துளை காணப்பட்டது. அந்த துளைக்குள் செல்லா தண்ணீர் ஊற்றினார். அப்போது துளையில் இருந்து 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு வெளியே வந்து, இருட்டில் மறைய சென்றது. அதற்குள் அந்த பாம்பை செல்லா லாவகமாக பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து விட்டார். அதன்பிறகு நோயாளிகள், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.