துணை முதல்-மந்திரி பதவிக்கு போட்டியா? மந்திரி எச்.டி.ரேவண்ணா பதில்


துணை முதல்-மந்திரி பதவிக்கு போட்டியா? மந்திரி எச்.டி.ரேவண்ணா பதில்
x
தினத்தந்தி 7 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-07T23:59:49+05:30)

துணை முதல்-மந்திரி பதவிக்கு போட்டியா? என்பது குறித்து மந்திரி எச்.டி.ரேவண்ணா பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி பதவிக்கு போட்டியா? என்பது குறித்து மந்திரி எச்.டி.ரேவண்ணா பதில் அளித்துள்ளார்.

துணை முதல்-மந்திரி பதவி

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை மந்திரியாக எச்.டி.ரேவண்ணா இருந்து வருகிறார். இந்த நிலையில், கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை காங்கிரசுக்கு விட்டு கொடுக்க உள்ளதாகவும், துணை முதல்-மந்திரி பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதாவது முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி பதவி எச்.டி.ரேவண்ணாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பகல் கனவு பலிக்காது

துணை முதல்-மந்திரி பதவி மீது எனக்கு ஆசை கிடையாது. அந்த பதவிக்கு வர வேண்டும் என்று நான் போட்டி போடவும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. முதல்-மந்திரி குமாரசாமி எனக்கு பொதுப்பணித்துறையை வழங்கியுள்ளார். அந்த துறையை சிறப்பாக நிர்வகித்து வருகிறேன். அதில் மட்டுமே கவனம் செலுத்து கிறேன். துணை முதல்-மந்திரி பதவிக்கு நான் போட்டி போடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மண்டியா, துமகூரு, ஹாசனில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கர்நாடக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். முதல்-மந்திரியாக குமாரசாமியே இருப்பார். கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று பா.ஜனதாவினர் பகல் கனவு காண்கின்றனர். பகல் கனவு பலிக்காது. கூட்டணி ஆட்சியையும் பா.ஜனதாவால் கவிழ்க்க முடியாது.

இவ்வாறு மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.

Next Story