மண்டியாவில் மகன் வெற்றி பெற கோவில், கோவிலாக குமாரசாமி சுற்றுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு
வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் மண்டியாவில் மகன் வெற்றி பெற கோவில், கோவிலாக குமாரசாமி சுற்றி வருகிறார் என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் மண்டியாவில் மகன் வெற்றி பெற கோவில், கோவிலாக குமாரசாமி சுற்றி வருகிறார் என்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
உப்பள்ளியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினை தாண்டவமாடுகிறது
மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. 160-க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசே அறிவித்துள்ளது. ஆனால் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கூட்டணி அரசு அலட்சியமாக உள்ளது. குறிப்பாக 160 தாலுகாக்களில் கடும் குடிநீர் பிரச்சினை தாண்டவமாடுகிறது. மக்கள் குடிநீருக்காக பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சென்று வருவாய் துறை மந்திரி பார்வையிடவில்லை. மாவட்ட பொறுப்பு மந்திரிகளும், தங்களது மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதி களுக்கு சென்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்காததால், மாவட்ட கலெக்டர்களாலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளனர்.
கோவில், கோவிலாக சுற்றுகிறார்
இதுபற்றி எல்லாம் முதல்-மந்திரி குமாரசாமியோ, கூட்டணி கட்சி தலைவர்களோ கவலைப்படவில்லை. வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் கூட்டணி அரசு செத்து விட்டது. மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் தோல்வி அடைந்து விடுவார் என்று குமாரசாமி நினைக்கிறார். அதனால் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவில், கோவிலாக முதல்-மந்திரி குமாரசாமி சுற்றி வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கூட்டணி அரசு காலதாமதம் செய்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் பெரும் விளைவுகளை கூட்டணி அரசு சந்திக்க நேரிடும். அதனால் கோவில், கோவிலாக சுற்றுவதை நிறுத்திவிட்டு வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சென்று முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் மந்திரிகள் பார்வையிட வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணி அரசுக்கு எதிராக பா.ஜனதா தீவிர போராட்டத்தில் ஈடுபடும்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Related Tags :
Next Story