ஏற்காட்டில், கல்லால் தாக்கி அக்காள்-தம்பி கொலை - வாலிபர் வெறிச்செயல்
ஏற்காட்டில் கல்லால் தாக்கி அக்காள்-தம்பி கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஏற்காடு,
சேலம் மாவட்டம் ஏற்காடு டவுனில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் தெப்பக்காடு என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெரிய கவுண்டர் மகன் பெரியான் (வயது 65). ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்தார்.
பெரியான் நேற்று வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்றார். அப்போது பெரியானின் பெரியப்பா மகளும், அக்காளுமான கரியாள் என்ற வெள்ளையம்மாள் (68) என்பவர் விறகு சேகரிக்க காட்டுக்கு வந்தார். பெரியானும், வெள்ளையம்மாளும் ஒரே காட்டுப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் நின்று கொண்டிருந்தனர்.
மாலை 5 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி மகன் சரவணன் (26) என்பவர் அந்த காட்டுக்குள் வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பெரியான் அருகில் சரவணன் வந்ததும் அவரை பெரியான் கண்டித்தார். இப்படி குடித்து விட்டு சுற்றுகிறாயே என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் அருகில் கிடந்த கல்லை தூக்கி வந்து பெரியான் மீது போட்டார். இதில் பெரியான் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் பெரியானை இழுத்துச் சென்று மீண்டும் கல்லை தூக்கி போட்டதாக தெரிகிறது. இதில் பெரியான் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
பெரியானின் சத்தத்தை கேட்டதும் வெள்ளையம்மாள் அங்கு ஓடி வந்தார். இதை பார்த்த சரவணன் திடுக்கிட்டார். பெரியான் கொலை செய்யப்பட்டதை வெளியே சொல்லிவிடுவார் என்று பயந்து வெள்ளையம்மாள் மீதும் கல்லை தூக்கி போட்டதாக தெரிகிறது. இதில் வெள்ளையம்மாளும் இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கரநாராயணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். வெறிச்செயலில் ஈடுபட்ட சரவணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story