ஒகேனக்கல் அருகே வாலிபர் சுட்டுக்கொலை, கைதான தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை
ஒகேனக்கல் அருகே வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஜருகு அருகே உள்ள குரும்பட்டியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 27). மெக்கானிக்கான இவர் கடந்த 1-ந்தேதி தனது அக்காவின் மகளான 15 வயது சிறுமியுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றார். அங்கிருந்து திரும்பியபோது பண்ணப்பட்டி என்ற இடத்தில் வனப்பகுதியில் முனுசாமியும், அந்த சிறுமியும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகளில் ஒருவர் துப்பாக்கியால் முனுசாமியை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் கொலை, அனுமதியின்றி துப்பாக்கியை பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தேடப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. துப்பாக்கி சூடு நடந்த மே 1-ந்தேதி பண்ணப்பட்டி பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான தொலைபேசி எண்களை கண்டறிந்து அதில் இந்த கொலை சம்பவம் தொடர்பான உரையாடல்கள் ஏதும் நடந்துள்ளதா? என்பதன் அடிப்படையிலும் விசாரணையை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் அருகே அம்மா பள்ளம் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார், இந்த வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி செல்வம் (45) என்பவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இவரை நேற்று காலை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அவரை அழைத்து சென்று அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து அவரிடம் தகவல்களை கேட்டறிந்தனர்.
செல்வம் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, செல்போன் ஆகியவை வனப்பகுதியில் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று விசாரித்த போலீசார் அவற்றை கைப்பற்ற வனப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்வத்தை அழைத்து சென்றனர். செல்வம் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளார். வனவிலங்குகள் வேட்டை தொடர்பாக இவர் மீது ஏற்கனவே சில புகார்கள் உள்ளன. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த மே 1-ந்தேதி வனப்பகுதியில் சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த முனுசாமியை அந்த வழியாக சென்ற செல்வம் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக முனுசாமியை துப்பாக்கியால் சுட்டதாகவும், விசாரணையின்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றதாகவும் போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாக சுற்றி திரிந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முனுசாமி கொலை சம்பவத்தில் செல்வத்திற்கு மட்டும் தொடர்பு உள்ளதா? அங்கிருந்த அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story