நாங்குநேரி அருகே லாரி மீது கார் மோதி கவிழ்ந்தது: போலீஸ் அதிகாரியின் தந்தை பரிதாப சாவு மகன் உள்பட 3 பேர் காயம்


நாங்குநேரி அருகே லாரி மீது கார் மோதி கவிழ்ந்தது: போலீஸ் அதிகாரியின் தந்தை பரிதாப சாவு மகன் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 7 May 2019 10:15 PM GMT (Updated: 7 May 2019 7:19 PM GMT)

நாங்குநேரி அருகே லாரி மீது கார் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் சென்னை போலீஸ் அதிகாரியின் தந்தை பரிதாபமாக பலியானார். உடன் வந்த மகன் உள்பட 3 பேரும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நாங்குநேரி, 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள சீதபாலை சேர்ந்தவர் ரத்தினசபாபதி (வயது 67). இவரது மூத்த மகன் சுதாகர். இவர் சென்னை போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். 2-வது மகன் அருண்பிரகாஷ் (30). இவர் சென்னையில் கிரானைட் தொழில் செய்து வருகிறார். ரத்தினசபாபதி தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சீதபாலையில் கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலையில் காரில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ரத்தினசபாபதி, தனது 2-வது மகன் அருண்பிரகாஷ் குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார். காரை அருண்பிரகாஷ் (30) ஓட்டினார்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் கார் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே சென்றது. அப்போது முன்னால் நாகர்கோவில் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகில் சென்றபோது லாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத அருண்பிரகாஷ் காரை உடனே நிறுத்த முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் லாரி புறப்பட்டு வேகமாக சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லாரியின் பின்னால் மோதிய வேகத்தில் காரின் முன்இருக்கையில் அமர்்ந்திருந்த ரத்தினசபாபதி, வெளியே தூக்கி வீசப்பட்டார். அப்போது கார் சாலையில் கவிழ்ந்து 2 முறை உருண்டது. இதில் காருக்கு அடியில் சிக்கி ரத்தினசபாபதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் இருந்த அருண்பிரகாஷ், அவரது மனைவி பிரசன்னா (29), மகள் லியா (2) ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தினசபாபதி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 3 பேரும் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story