ஓசூர் அருகே மாநில எல்லையில், வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை - போலீசார் விசாரணை
ஓசூர் அருகே மாநில எல்லையில் வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. சுங்கச்சாவடி அருகில் ராகவேந்திரா காலனி நஞ்சுண்டப்பா லேஅவுட் உள்ளது. இந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து பெங்களூரு திலக் நகரை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் நீலநிற கட்டம் போட்ட சட்டையும், பேண்டும் அணிந்திருந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்து அங்கு வந்து உடலை போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அத்திப்பள்ளி சுங்கச்சாவடி பக்கமாக மாநில எல்லையில் உடல் கிடப்பதால் கொலையுண்டவர் ஓசூரை சேர்ந்தவராக இருக்கலாம் என அத்திப்பள்ளி போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களில் யாரேனும் காணாமல் போனதாக நகரில் உள்ள டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவாகி உள்ளதா? என்று அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story