குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான, 3 பேரை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு அனுமதி - நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான, 3 பேரை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு அனுமதி - நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-08T00:49:35+05:30)

குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 3 பேரை காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி, நாமக்கல் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தை விற்பனை புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர் அருள்சாமி ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் 3 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று மாலையே விசாரணைக்கு வந்தது. இதையொட்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமுதவள்ளி, முருகேசன் மற்றும் அருள்சாமி ஆகியோரை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி, கைதான அமுதவள்ளியை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர் அருள்சாமி ஆகியோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடங்களில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அமுதவள்ளி, ரவிச்சந்திரன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா ஆகிய 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story