சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அரிய வகை சங்குகள் பறிமுதல் 6 பேரிடம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 180 அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அரிய வகை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஜமீல் உசேன் (வயது 46), யூனுஸ் (37), நூர் முகமது (32), அலாவுதீன் (38), நாகூர்மிரான்(32) உள்பட 6 பேர் குழுவாக சிங்கப்பூருக்கு செல்ல வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், 6 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.
பின்னர் அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் அரிய வகையான பச்சை நிற சங்குகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் இந்த அரிய வகை பச்சை நிற சங்குகள் சிங்கப்பூரில் ஒன்று மட்டும் 50 டாலர் வரை விலை போகும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, 6 பேரிடம் இருந்த 180 கிலோ எடைகொண்ட பச்சை நிற சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.