துபாய், கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல், 4 பெண்கள் சிக்கினர்


துபாய், கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல், 4 பெண்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 7 May 2019 7:35 PM GMT)

துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னைக்கு துபாயில் இருந்து விமானத்தில் வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரஜனி (வயது 45), சரஸ்வதி (35) ஆகியோர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவர்கள் ரூ.32 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள 997 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த லட்சுமி (53) என்பவரை சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.6 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 206 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் கொழும்பில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த செய்யது அலி பாத்திமா (45) என்பவரை சோதனை செய்ததில், அவர் மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 74 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

4 பெண்களிடம் இருந்து மொத்தம் ரூ.41 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 277 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story