தாயுடன் புகார் கொடுக்க வந்தபோது சிறுமிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டில் வழக்கு
தாயுடன் புகார் கொடுக்க வந்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
சென்னை சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் 42 வயது பெண். விவாகரத்து பெற்ற இந்த பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் தொழில் அதிபர் ஜெயகரன் வாசுதேவன் என்பவரை அந்த பெண் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு, ஜெயகரன் வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே 2–வது கணவர் ஆன்–லைன் மூலம் போலீசாருக்கு தனது மனைவி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்போது புழல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜன் என்பவர் அந்த பெண்ணையும், அவரது 17 வயது மகளையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். அங்கு சென்றவுடன் இன்ஸ்பெக்டர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சிறுமியும், அவரது தாயும் கோர்ட்டை நாட முடிவு செய்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் வந்து தங்களுக்கு தொல்லை தரும் 2–வது கணவர் ஜெயகரன் வாசுதேவன் மீதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பரணிதரன், வருகிற 10–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.