‘கத்திரி’ வெயிலால் ஆக்ரோஷம் அடையாமல் இருக்க வண்டலூரில் விலங்குகளுக்கு தனி கவனிப்பு


‘கத்திரி’ வெயிலால் ஆக்ரோஷம் அடையாமல் இருக்க வண்டலூரில் விலங்குகளுக்கு தனி கவனிப்பு
x
தினத்தந்தி 8 May 2019 4:30 AM IST (Updated: 8 May 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

கத்திரி வெயிலால் விலங்குகள் ஆக்ரோஷம் ஆகாமல் இருக்க வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

‘கத்திரி’ வெயில் மனிதர்களை மட்டுமின்றி வீட்டு விலங்குகள், வன விலங்குகள், பறவைகளையும் வாட்டி வதைக்கிறது. காட்டுக்குள் இருக்கும் வன விலங்குகள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது. யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் படையெடுத்து வருவதையும் காண முடிகிறது.

சென்னையை அடுத்த வண்டலூர் விலங்கியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளும் வெயிலால் சோர்வடைந்துள்ளன. பார்வையாளர்களை குஷிப் படுத்தும் மனித குரங்குகள் வெயிலுக்கு பயந்து அகழியில் இருக்கும் அறையில் இருந்து வெளியே தலைக்காட்டுவது இல்லை.

வெயில் ஓய்ந்த பிறகே அவைகள் வெளியே தலைக்காட்டுகின்றன. மனித குரங்குகளுக்கு உடல் சூட்டை தணிக்க தர்பூசணி பழங்கள், ‘குளுக்கோஸ்’ கலக்கப்பட்ட தண்ணீர் போன்றவை வழங்கப்படுகின்றன. மேலும் அவைகள் குளிப்பதற்காக சவர் அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் ஈர சாக்குத்துணி போர்த்தப்பட்டு, அவ்வப்போது பணியாளர்கள் நீர் பாய்ச்சுகின்றனர். யானைகள் குளிப்பதற்காக பெரிய அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

யானை பராமரிப்பாளர்கள் அவ்வப்போது யானைக்கு வெயிலின் தாக்கம் தெரியாத வண்ணம் தண்ணீரை ஊற்றி வருகிறார்கள். யானைகளும் தும்பிக்கையால் தண்ணீரை தனது உடலில் பீய்ச்சி அடித்துக்கொள்கின்றன.

ஈமு, வான்கோழி, பறவை இனங்கள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகள் ஜில்லென்று இருக்கும் வகையில் ஈரத்துணிகளால் போர்த்தப்பட்டுள்ளன. விலங்குகள் தண்ணீர் தாகத்தை தணிப்பதற்காக தொட்டிகளில் தண்ணீர் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. ஒட்டகசிவிங்கிகளுக்கு ‘குளுகுளு’ தண்ணீர் வழங்கப்படுகிறது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அதிகம் வழங்கப்படுகின்றன.

கோடை விடுமுறை காலம் என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். பார்வையாளர்கள், வெயில் சுமை தெரியாமல் பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கு வசதியாக, நடைபாதை முழுவதும் துணிகளை கொண்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வெயில் தாக்கத்தால் வன விலங்குகள் ஆக்ரோஷம் அடையாமல் இருக்கவும், பார்வையாளர்கள் சிரமம் இன்றி சுற்றி பார்க்கவும் அனைத்து வகையான ஏற் பாடுகளையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள மான்கள், பறவை இனங்கள் வெயிலை சமாளிக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story