ஆனைமலை அருகே 150 வயது அரியவகை மரத்தை வெட்டியதாக விதிமீறல் புகார்


ஆனைமலை அருகே 150 வயது அரியவகை மரத்தை வெட்டியதாக விதிமீறல் புகார்
x
தினத்தந்தி 7 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-08T01:45:02+05:30)

ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் இருந்த 150 ஆண்டு பழமையான அரியவகை மரத்தை விதி மீறி வெட்டியதாக நெடுஞ்சாலைத்துறையினர் மீது பசுமைத்தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை,

ஆனைமலையை அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் அரிய வகையான கரும்வாகை மரம் ஒன்று இருந்தது. இந்த மரம், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் இன்றி இருந்த இந்த மரத்துக்கு வயது சுமார் 150 இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் ஏலம் விட்டு வெட்டுவதற்கு அனுமதி அளித்தனர். அதன்பேரில் ஏலம் எடுத்தோர் நேற்று இந்த மரத்தை பல மணி நேரம் போராடி வெட்டி சாய்த்தனர். இந்த மரத்தை வெட்டியதில் விதிமீறல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது;– கரும்வாகை எனப்படும் மரம், ஈட்டி, தேக்கு மரங்களைக் காட்டிலும் அதிக மதிப்பு மிக்கது. இந்த வகை மரம் ஆனைமலை வட்டாரத்தில் ஆழியாறு மற்றும் அம்பராம்பாளையம், சுங்கம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும்தான் இருந்தது.

இதில் அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் இருந்த மரத்துக்கு வயது சுமார் 150 இருக்கும். நன்கு செழித்து வளர்ந்த இந்த மரம், எந்த நேரத்திலும் விழுந்துவிடும் அபாயம் இருப்பதாக பொய்யான தகவலை கூறி நெடுஞ்சாலைத்துறையினர் அதனை வெட்ட ஏலம் விட்டுள்ளனர். பொது பயன்பாட்டில் உள்ள மரங்களை வெட்டுவதென்றால் ரூ. 5 ஆயிரம் மதிப்பிற்கு குறைவாக உள்ளவற்றிற்கு தாசில்தாரும், ரூ. 10 ஆயிரம் மதிப்பு வரை சப்–கலெக்டரும் அனுமதி வழங்கலாம். அதற்கு மேல் மதிப்புள்ள மரங்களை வெட்ட கலெக்டர் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஆனால் சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள அந்த மரத்தை தாசில்தாரரிடம் அனுமதி பெற்று வெட்ட ஏலம் விட்டது விதிமீறலாகும்.

அதிலும் எந்த ஏலம் குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமல் ரகசியமாக நடத்தி முடித்திருக்கின்றனர். ரூ. 4 லட்சம் மதிப்புள்ள அந்த மரத்தை வெறும் ரூ.65ஆயிரத்திற்கு ஏலம் விட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை ஏலம் விட்டதில் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆகவே நன்றாக இருந்த அரிய வகையான கரும்வாகை மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் தங்களின் ஆதாயத்துக்காக வெட்ட அனுமதி அளித்தது தொடர்பாக பசுமைத்தீர்ப்பாயத்திலும், ஏலம் விட்டதில் நடந்துள்ள முறைகேடுகள், வருவாய் இழப்பு ஆகியவை குறித்து கலெக்டரிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story