மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் தங்கம் பறிமுதல்; பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை


மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் தங்கம் பறிமுதல்; பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-08T01:53:37+05:30)

மதுரை விமான விமானத்திற்கு ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பெண் உள்பட 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

வெளிநாட்டில் இருந்து வரும் விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில் இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இலங்கை விமானம் மூலம் மதுரை வந்த பயணிகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த அமிதாபீவி என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 120 கிராம் தங்க சங்கிலியை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 500 ஆகும்.

இதேபோன்று துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். இதில் தஞ்சாவூரை சேர்ந்த ஷேக் அலாவுதீன் (வயது 40) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர் மறைத்து வைத்து 300 கிராம் தங்கச்சங்கிலியை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்து 900 ஆகும். பின்னர் அதிகாரிகள் அந்த தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 400 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த அமிதாபீவி, ஷேக் அலாவுதீன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story