மேட்டுப்பாளையத்தில் வீடு புகுந்து ரூ.6 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
புதுவை மேட்டுப்பாளையத்தில் வீடு புகுந்து ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மூலக்குளம்,
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 55), கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி சாந்திமதி (51). இவர், உறவினரின் மருத்துவ செலவுக்காக தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.6 லட்சத்தை எடுத்துக்கொண்டு மகள் பொன்னியுடன் மொபட்டில் கடந்த மார்ச் மாதம் 16–ந் தேதி வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று சாந்திமதி மீது அரிப்பு பொடியை தூவியது. வீட்டிற்கு வந்தவுடன் சாந்திமதிக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. எனவே வங்கியில் எடுத்துவந்த ரூ.6 லட்சத்தை வீட்டில் உள்ள மேஜை மீது வைத்துவிட்டு அவருடைய அறைக்கு குளிக்க சென்றுவிட்டார். அப்போது சாந்திமதி மீது அரிப்பு பொடி தூவிய மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து அவருடைய வீட்டிற்குள் புகுந்து ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை கடந்த மாதம் 9–ந் தேதி போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (22), மூர்த்தி (40) என்பதும், அவர்கள் சாந்திமதி வீட்டில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொள்ளையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு வங்கி அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (28) என்பதும், இவருக்கு சாந்திமதி வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது திருச்சி, கரூர், உடுமலை பேட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.