கொடைரோடு அருகே வனக்காவலரை கொன்ற 5 பேர் கைது
கொடைரோடு அருகே வனக்காவலரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைரோடு,
கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர், சிறுமலை வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். சிறுமலை அடிவாரம் மாவூர் அணை அருகே இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமர்ந்து நேற்று முன்தினம் 7 பேர் கொண்ட கும்பல் மதுபானம் குடித்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் தோட்டத்தில் இளநீரை திருடினர். இதனை கண்டித்த ராஜேந்திரனை அந்த கும்பல் பிராந்தி பாட்டிலால் குத்தி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற அவருடைய மனைவி சுந்தரவள்ளிக்கு படுகாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நிலக்கோட்டையை அடுத்த சையநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27), ஆவாரம்பட்டியை சேர்ந்த சேதுபதி (25) என்று தெரியவந்தது. இவர்களுடன் சேர்ந்து 5 பேர், ராஜேந்திரனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆவாரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (28), மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் (27), ஆவாரம்பட்டியை சேர்ந்த மருதுபாண்டி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story