ஒரத்தநாடு அருகே, போர்வெல் உரிமையாளரை தாக்கி கார் கண்ணாடி உடைப்பு - வாலிபர் கைது, 3 பேருக்கு வலைவீச்சு


ஒரத்தநாடு அருகே, போர்வெல் உரிமையாளரை தாக்கி கார் கண்ணாடி உடைப்பு - வாலிபர் கைது, 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 May 2019 3:30 AM IST (Updated: 8 May 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே போர்வெல் உரிமையாளரை தாக்கி கார் கண்ணாடி உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது54), இவர் எந்திரம் மூலம் போர்வெல் (ஆழ்குழாய் கிணறு) அமைக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கராசு அவரது மகன் ஜெகதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் ஒக்கநாடு கீழையூரில் நடைபெற்ற ஒரு கோவில் விழாவிற்கு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முத்துக்குடிக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (32) என்பவர் பின்னால் காரை ஓட்டிச்சென்ற தங்கராசு மகன் ஜெகதீஷிடம் மெதுவாக வரமாட்டீர்களா? எனகேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார் மற்றும் சிலர் சேர்ந்து தங்கராசு மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் தாக்கி கார் கண்ணாடியையும் உடைத்தனர்.

இதுகுறித்து தங்கராசு அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் சிவக்குமார், அருண், சசிகுமார், காத்தமுத்து ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story