“குடும்ப கட்சியான தி.மு.க. நாட்டை ஆள வாய்ப்பு கொடுக்கக்கூடாது” ஓட்டப்பிடாரம் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு


“குடும்ப கட்சியான தி.மு.க. நாட்டை ஆள வாய்ப்பு கொடுக்கக்கூடாது” ஓட்டப்பிடாரம் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 7 May 2019 8:50 PM GMT)

“குடும்ப கட்சியான தி.மு.க. நாட்டை ஆள வாய்ப்பு கொடுக்கக்கூடாது” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை மதுரையில் இருந்து கார் மூலம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வந்தார். அவருக்கு குறுக்குச்சாலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், மணிகண்டன், ராஜலட்சுமி, சேவூர் ராமச்சந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓட்டப்பிடாரத்துக்கு வந்தார். அங்கு பஜார் முழுவதும் வாழைமரங்கள் கட்டப்பட்டு, பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் மலர் தூவியும், செண்டை மேளம் முழங்கவும் வரவேற்றனர். பின்னர் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் உங்களிடம் ஏற்கனவே அறிமுகமானவர். அவர் வெற்றி பெற்றால் குறைகளை எடுத்து சொல்லி அதை நிவர்த்தி செய்ய வாய்ப்பாக அமையும். நல்ல திறமையான வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். எதிரணியை சேர்ந்தவர் வெற்றி பெற மாட்டார். அவர் வெற்றி பெற்றால், முதல்-அமைச்சரை பார்ப்பாரா, உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவாரா? என்றால் எதுவும் நடக்காது. ஏற்கனவே 88 பேர் இருக்கிறார்கள். ஒருவர்கூட என்னிடம் மனு கொடுக்கவில்லை. ஆகையால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவர் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் உங்கள் கோரிக்கை எங்கள் கவனத்துக்கு வரும். உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இந்த இடைத்தேர்தல் எப்படி வந்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். சில பேராசை பிடித்தவர்கள் ஒரு சிலரால் தூண்டி விடப்பட்டு இந்த கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று செயல்பட்டதன் விளைவு, இன்று நடுரோட்டில் வந்து உங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். இந்த தேர்தல் மூலமாக இப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். உங்கள் உழைப்பால் வெற்றி பெற்ற அந்த உறுப்பினர் இந்த பகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் தன்னுடைய சுயநலத்துக்காக, பேராசையால், பதவியிழந்து நாம் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளோம். 2016-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக கூட இல்லை. ஆனால் 2016-ம் ஆண்டு ஓட்டப்பிடாரம் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தீர்கள். அந்த நன்றியை மறந்து, சேராதவரோடு சேர்ந்து இன்று இந்த தேர்தலை சந்திக்கிறோம்.

இந்த தொகுதி ஜெயலலிதா கோட்டையாக விளங்கியது. இந்த தொகுதியில் நம் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம். இந்த பகுதி வளம் பெற வேண்டும், செழிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

ஓட்டப்பிடாரத்தில் ரூ.106 கோடி செலவில் 248 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கவர்னகிரியில் ரூ.75 லட்சம் செலவில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் சீரமைத்து நூலகம் அமைக்கப்பட உள்ளது. புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. வ.உ.சி. இல்லத்தில் முழு வெண்கல சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் சீரமைக்க ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு வ.உ.சி. பெயரில் கோர்ட்டு அமைக்கப்படும், ஓட்டப்பிடாரம் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படும். புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம் என்பதை பட்டியலிட்டு கூறி உள்ளோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும் என்னை பற்றியும், எங்கள் அமைச்சர்களை பற்றியும், ஆட்சியை பற்றியும் குறை கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால், தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வரப்பட்டது என்று கூறிய வரலாறு கிடையாது. அப்படி பேசுவதற்கு தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. ஆரம்ப கல்வி 99 சதவீதமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 100-க்கு 21 பேர் உயர்கல்வி படித்துக் கொண்டு இருந்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வியில் எடுத்த புரட்சி காரணமாக, 100-க்கு 46.8 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதில் தமிழகம் முதல் இடம் பிடித்து உள்ளது. கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறப்பான கல்வி உள்ள மாநிலம் என்றால் தமிழகம் என்ற பெயரை பெற்று உள்ளோம்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மீது ஒரு தவறான, பொய்யான குற்றச்சாட்டை சொல்லிவிட்டு சென்று உள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அ.தி.மு.க.வினர் போலி பத்திரிகையாளர் உதவியுடன் முறைகேடு செய்ததாக வக்கீல் அருள் என்பவர் புகார் அளித்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த புகாருக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் தவறான தகவலை பரப்பிய வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். வக்கீல் அருள் மீது ஏற்கனவே 9 வழக்குகள் உள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது. தவறான தகவலை பரப்பி மிரட்டி பணம் பறிப்பதுதான் அவரது வேலை. வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடன் செல்போனில் பேசுவதாக வெளியிட்ட ஆடியோ, வேண்டுமென்றே அவரது அலுவலகத்தில் வேலை செய்த கலையரசி என்பவரின் தோழியை வைத்து பேசி பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் கலையரசியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது கூடத்தெரியாத எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே எங்கள் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வழக்கில் தொடர்பு படுத்தி பேசுவது, அப்பட்டமான பொய் என்பதை மக்கள் அறிய வேண்டும். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இழிவுபடுத்த வேண்டும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று பொய்யான புகார் தெரிவித்தவரை நம்பி பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது. தி.மு.க. தலைவர் மீது சட்டமன்ற உறுப்பினர் அவதூறு வழக்கு தொடருவார். தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு கோர்ட்டு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உள்ளது. அதனை கூறியதற்காக, மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார்.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை எடுத்து சொல்வது எங்கள் கடமை. ரெயிலில் சென்று கொண்டு இருந்த கர்ப்பிணியை தி.மு.க.வினர் பலாத்காரம் செய்ய முயன்றனர். அழகு நிலையத்தில் பெண்ணை அடித்து உதைக்கின்றனர். புரோட்டா கடைகளில் தகராறு செய்கின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கட்டபஞ்சாயத்து செய்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த அளவுக்கு அராஜகம் செய்தால், ஆளும் கட்சியாக இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பதில் முதன்மையான மாநிலமாக இருப்பது தமிழ்நாடு.

தி.மு.க. ஆட்சியில் சாதிக்பாட்ஷா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவரும், தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ராசாவும் நெருக்கமாக தொழில் செய்தனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் நெருக்கமாக இருந்தார். 2ஜி வழக்கில் சி.பி.ஐ. சாதிக் பாட்ஷாவை விசாரிக்க முற்பட்டபோது, மர்மமான முறையில் இறந்து விட்டார். இந்த நிலையில் அவரது மனைவி ஜனாதிபதியிடம் புகார் தெரிவித்து உள்ளார். அந்த புகாரும் தூசி தட்டப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண், அண்ணாநகர் ரமேஷ் மர்மமான முறையில் இறந்து உள்ளனர். இதுதொடர்பாக யாரெல்லாம் புகார் கொடுத்து உள்ளார்களோ அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அட்டூழியம் செய்தவர்களை விட்டு வைக்கக்கூடாது என்று அரசுக்கு கடிதம் வந்து கொண்டு இருக்கிறது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தைப்பொங்கலையொட்டி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1,000 வழங்கினோம். அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து திட்டம் தொடங்கி வைத்தோம். அதற்கு மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வழக்கு தொடரப்பட்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அனைத்து ஏழை தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

நான் விவசாயி. இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த குரல் கொடுப்போம். ஏழைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.. கேபிள் டி.வி. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கும், தயாநிதி மாறன் குடும்பத்துக்கும் மொத்தம் 40 சேனல்கள் உள்ளன. இந்த சேனலுக்கு ரூ.56 கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை மு.க.ஸ்டாலின் குறைக்கலாமே. இந்த சேனல் கட்டணத்தை இலவசம் என்று அறிவிக்கலாமே. அதனை செய்ய மாட்டார்கள்.

தி.மு.க. மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி நடத்தவில்லை. அது கார்ப்பரேட் கம்பெனி. அது குடும்ப கட்சி. அந்த குடும்ப கட்சி நாட்டை ஆள வாய்ப்பு கொடுக்கக்கூடாது. 6 சமுதாயத்தை சேர்ந்தவர்களை சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். அதற்கு குழு அமைத்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புதியம்புத்தூர், தருவைகுளம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தாளமுத்துநகர், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, பாரதிநகர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். இதில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் தலைவர் காமாட்சி என்ற காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story