தலைவாசல் அருகே, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை? போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு


தலைவாசல் அருகே, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை? போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-08T02:20:25+05:30)

தலைவாசல் அருகே கர்ப்பிணி உடல் தூக்கில் தொங்கியது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தலைவாசல், 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. விவசாயி. இவருடைய மனைவி அனுசுயா (வயது 25). கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனுசுயாவின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். வேலுவுக்கும், அனுசுயாவுக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. மோகன் பிரசாந்த் (2) என்ற மகன் உள்ளான். அனுசுயா கர்ப்பமாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலுவும், அனுசுயாவும் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் தூங்க சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை வேலு எழுந்து பார்த்தபோது அனுசுயா உடல் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கியது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அனுசுயாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு நேற்று காலை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அனுசுயாவின் குடும்பத்தினர் ஒரு வேனில் மயானத்துக்கு வந்தனர். அனுசுயாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடல் அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

இதற்கிடையே கர்ப்பிணி அனுசுயா உடல் தூக்கில் தொங்கியது குறித்தும், உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றது குறித்தும் தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், காட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் மாதமணி, சார்வாய் கிராம நிர்வாக அதிகாரி துரையரசு ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அனுசுயாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அனுசுயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுசுயா எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் அனுசுயா இறந்து விட்டதால் ஆத்தூர் உதவி கலெக்டர் அபுல்காசிம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார். கர்ப்பிணி உடல் தூக்கில் தொங்கியதும், உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்ற சம்பவமும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story