பரமத்தி வேலூர், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில், தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது - 38½ பவுன் மீட்பு
பரமத்தி வேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 38½ பவுன் நகைகளை மீட்டனர்.
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவுப்படி, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மேற்பார்வையில், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதையடுத்து அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர்.
இதில் அவர்கள் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் அசோக் (வயது20), அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் தினகரன் (23), பொன்னையன் மகன் பாரதிராஜா (28) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நல்லூர் பகுதியில் செக்குபட்டி சாலையில் மொபட்டில் சென்ற வளர்மதி என்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியையும், பரமத்தி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் மொபட்டில் சென்ற சுகந்தி என்ற பெண்ணிடம் 8½ பவுன் தாலிக்கொடியையும், கடந்த ஏப்ரல் மாதம் கரூர் மாவட்டம் ஏம்பூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 7½ பவுன் தாலிக்கொடியையும், கரூர் மாவட்டம் குட்டக்காடு அருகே மொபட்டில் சென்ற ஒரு பெண்ணிடம் 6 பவுன் தாலிக்கொடியையும், கடந்த 4-ம் தேதி பரமத்தி அருகே காரைக்கால் பிரிவு சாலையில் மொபட்டில் சென்ற கணவன், மனைவியை கத்தியை காட்டி மிரட்டி 7½ பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை பறித்துச்சென்றதும் தெரிய வந்தது.
இதேபோல நேற்று வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் மணியனூர் பிரிவு சாலை அருகே வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டுக்கல் போஜனம்பட்டி வடமதுரை பகுதியைச் சேர்ந்த தாசப்பன் மகன் செக்குராஜா (42), அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சுந்தர்ராஜன் (25) என்பதும், இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 11-ம் நல்லூர் செம்மண்குழிகாடு அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியையும், கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நல்லூர் அருகே செக்குபட்டி சாலையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட அசோக், தினகரன், பாரதிராஜா, செக்குராஜா மற்றும் சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 38½ பவுன் நகைகளையும் மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைதான 5 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story