தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியும் தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி


தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியும் தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 May 2019 3:30 AM IST (Updated: 8 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. அலுவலகம் அமைந்துள்ள வணிக வளாகத்தில் கடந்த மாதம் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.1 கோடியே 48 லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் அ.ம.மு.க. தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளரும், வக்கீலுமான செல்வம் என்பவரை சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரை அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் க.விலக்கில் நிருபர்களுக்கு தங்கதமிழ்செல்வன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.ம.மு.க. அலுவலகத்தில் பணம் இருந்ததாக கூறும் வழக்கு திட்டமிட்டு ஜோடிக் கப்பட்ட வழக்கு. சட்டரீதியாக இதை சந்திப்போம். எங்களை தி.மு.க.வின் ‘பி’ அணி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். தி.மு.க.வின் ‘பி’ அணி என்றால் நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அவர்களோடு கூட்டணி வைத்தே நின்று இருப்போமே. இது கூடவா ஜெயக்குமாருக்கு தெரியவில்லை. நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எப்படி மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தினோமோ, அதுபோல், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்துவோம்.

ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக இருந்தபோதே ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. ஊழல் ஆட்சி என்று தர்மயுத்தம் நடத்தினார். பின்னர் மோடி சொன்னதால் மீண்டும் இணைந்தார். இப்போது வாரணாசி சென்று காவி வேட்டி கட்டி மோடியின் காலில் விழுகிறார். இந்த விசுவாசத்தை இதற்கு முன்பு அவர் அ.தி.மு.க.வுக்கு காட்டவில்லை.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் அதிகாரம் பறந்து கொண்டு இருக்கிறது. அதையும் மீறி அ.ம.மு.க. வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல் என்பது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல். நாங்கள் 22 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க.வும், நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும். அப்போது பொதுத்தேர்தல் வரும். அதில் வெற்றி பெற்று அ.ம.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.

22 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று, நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பு நடத்துவோம். அதற்கு தி.மு.க. எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் தி.மு.க. எங்களை கண்டு பயப்படுகிறது என்று அர்த்தம்.

மத்தியில் யார் வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். எங்களுக்கு தேவை தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது மோடியையும், மத்திய அரசையும் அ.தி.மு.க. அமைச்சர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்கள். அதுபோல், அ.தி.மு.க.வை பா.ஜ.க.வினர் எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது இவர்கள் கூட்டணி சேர்ந்து ஓட்டு கேட்டால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள். நிச்சயம் இது சந்தர்ப்பவாத கூட்டணி என்று மக்கள் புரிந்து கொண்டு மிகப்பெரிய தோல்வியை அவர்களுக்கு கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story