ஆரணி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ஆரணி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 4:51 PM GMT)

ஆரணி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48). இவருக்கு சொந்தமான நிலம் மொழுகம்பூண்டி ஏரிக்கரையில் உள்ளது. அங்கு விவசாயம் செய்து வந்தார். மேலும் நெல், அரிசி வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவியும், ஷாலினி (17), ரோஜா (15) ஆகிய மகள்களும், தருண் (10) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஆரணி சுற்று வட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக விஸ்வநாதனின் நிலத்தில் இருந்த வேப்பமரத்தின் கிளைகள் முறிந்து இருந்தன. நேற்று காலை விஸ்வநாதன் நிலத்திற்கு சென்றபோது அங்கு மரம் முறிந்து இருப்பதை பார்த்தார்.

இதையடுத்து மரக்கிளையை வெட்டி அகற்ற கத்தியை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது அவ்வழியாக செல்லும் மின்வயர் அறுந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை.

மரக்கிளையை அவர் வெட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரமாகியும் நிலத்திற்கு சென்ற விஸ்வநாதன் வராததால் அவரது மனைவி பாஞ்சாலை அவ்வழியாக சென்ற உறவினரிடம் கணவரை உடனடியாக வீட்டிற்கு வரச் சொல்லி அனுப்பி உள்ளார். அவர் அங்கு சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கி விஸ்வநாதன் இறந்தது தெரிந்தது.

இதுகுறித்து பையூர் கிராம நிர்வாக அலுவலர் இளவரசனுக்கும், ஆரணி தாசில்தார் தியாகராஜனுக்கும், ஆரணி தாலுகா போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story