வேலங்காடு பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்


வேலங்காடு பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 5:09 PM GMT)

வேலங்காடு, வல்லண்டராமம் பொற்கொடிஅம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் வேலங்காடு, வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவும் ஒன்று. வேலங்காடு ஏரியில் பொற்கொடி அம்மனுக்கு இந்த விழா எடுக்கப்படுகிறது.

அனைத்து மக்களுக்கும், அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளும் நோய்நொடியின்றி இருக்க இந்த விழா நடத்தப்படுவதாக வரலாறு உள்ளது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த திருவிழாவை வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராம மக்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

இந்த திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் நேற்று முன்தினம் முதலே வர தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பச்சை ஓலை கட்டிய மாட்டு வண்டி, டிராக்டர், வேன், ஆட்டோக்களில் குடும்பத்துடன் உறவினர்களுடன் வந்தனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனை புஷ்பரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. இதனையடுத்து வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம் ஆகிய கிராமங்களில் வாணவேடிக்கையுடன் புஷ்பரத உலா நடந்தது.

அம்மன் புஷ்பரதத்தில் நேற்று வேலங்காடு ஏரியில் எழுந்தருள செய்யப்பட்டது. ஏரிக்கோவிலுக்கு காலை 10 மணிக்கு வரவேண்டிய புஷ்பரதம் சரியாக பகல் 2 மணிக்கு வந்தது. 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புஷ்பரதத்தை சுமந்துக்கொண்டு வந்து மக்கள் வெள்ளத்தில் தேரை நிலை நிறுத்தினர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சாமி தரிசனம் செய்வதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் உள்பட யாரையும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பு தரிசனம் செல்லும் வழியில் அனுமதிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவைகளை பலியிட்டு வழிபட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏரியில் பொங்கல் வைத்தனர்.

விழாவிற்கு வந்த விவசாயிகள், கால்நடைகளையும் அழைத்து வந்திருந்தனர். கால்நடைகளுடன் அவர்கள் கோவிலை வலம்வந்து வழிபட்டனர். திருவிழாவையொட்டி எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே இருந்தது.

அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளும், உபயதாரர்களும் தண்ணீர், மோர், பானகம் ஆகிவற்றை வழங்கினர். டிராக்டர்களிலும் குடிநீர் எடுத்து வந்து வினியோகம் செய்யப்பட்டது.

விழாவில் உதவி கலெக்டர் மெகராஜ், தாசில்தார் பெருமாள், தனிதாசில்தார் குமார், துணை தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் தேவிகலா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள வசதியாக வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சுதானந்தம் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 21 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 குற்றப்பிரிவு போலீசார் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கால்கொலுசு திருடப்பட்டதாக தாய்மார்கள் புகார் கூறினர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் விஜயா, ஆய்வாளர்கள் ரவிக்குமார், மாதவன், செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் மற்றும் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பணங்காடு ஆகிய மேட்டுகுடிகள் மற்றும் கோவில் எழுத்தாளர்கள் ஆறுமுகம், ஆனந்தன் உள்பட பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story