நாராயணி பீடத்தின் 27-வது ஆண்டு விழா: 10,008 கலச மஞ்சள் நீர் அபிஷேகம் மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்பு


நாராயணி பீடத்தின் 27-வது ஆண்டு விழா: 10,008 கலச மஞ்சள் நீர் அபிஷேகம் மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 May 2019 4:15 AM IST (Updated: 8 May 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

நாராயணிபீடத்தின் 27-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10,008 கலச மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது. இதில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டார்.

வேலூர், 

வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் நாராயணி அம்மன் சுயம்புவாக தோன்றினார். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8-ந் தேதி நாராயணி பீடத்தின் ஆண்டுவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நாராயணி அம்மனுக்கு மஞ்சள் நீர் கலசாபிஷேகம் செய்து வருகிறார்கள்.

நாராயணி பீடத்தில் 27-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு முதலில் சக்தி அம்மாவுக்கு, அவருடைய வெளிநாட்டு பக்தரான சிங்கப்பூரை சேர்ந்த ஒய்ச்சூ மற்றும் சத்யபூஷன் ஜெயின் ஆகியோர் பாதபூஜை நடத்தினர். பின்னர் சக்தி அம்மாவின் தாய் ஜோதி அம்மாள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து உலக அமைதிக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் நாராயணி பீடத்தின் கருவறையில் யந்திர வடிவாக உள்ள நாராயணி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே மஞ்சள்நீர் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. மஞ்சள் நீர் கலசத்துக்கு சக்தி அம்மா பூஜை செய்து, நாராயணி அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தார்.

அதன்பின்னர் விழாவில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.வே.சிங், அவருடைய மனைவி பார்த்தி சிங் ஆகியோர் மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நாராயணி அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தனர். மாலைவரை 10,008 கலசங்களில் மஞ்சள் நீர் கொண்டு வந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பேசியதாவது:-

சக்தி அம்மா தனது 16 வயதிலேயே பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். 27 வருடங்களில் தனது ஆன்மிக சேவையின் மூலம் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். அவர் ஆன்மிகத்தில் மட்டுமின்றி பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவி, கிராமங்களுக்கான குடிநீர் வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றையும் செய்து வருகிறார்.

சக்தி அம்மாவின் இந்த தொலைநோக்கு பார்வை இந்தப்பகுதியின் மேம்பாட்டுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களின் மேம்பாட்டுக்கும் வலுசேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அறங்காவலர் சவுந்தர்ராஜன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Next Story