மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன


மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 7 May 2019 10:15 PM GMT (Updated: 8 May 2019 5:13 PM GMT)

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் பலத்த சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் நிவாரணம் கேட்டு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றால் வாழைகள் சாய்ந்து விழுந்தன. மானாமதுரை வட்டாரத்தில் மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை, அன்னியேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. நாட்டு வாழை, ஒட்டு வாழை, முப்பட்டை, ரஸ்தாளி, பச்சை, கற்பூரம் என பல வகைகள் இருந்தாலும் விவசாயிகள் பெரும்பாலும் முப்பட்டை, நாட்டு வாழையே அதிக அளவு பயிரிடுகின்றனர்.

ஏக்கருக்கு ஆயிரத்து 400 கன்றுகள நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்யப்பட்ட 12 வது மாதத்தில் அறுவடை தொடங்கும். ஏக்கருக்கு 1½ லட்ச ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்து வாழையை வளர்த்து வருகின்றனர். தெ.புதுக்கோட்டை, மேலநெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 75 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வாழையை பயிரிட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக ஆலம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. வாழைகள் அறுவடை செய்யப்பட வேண்டிய நேரத்தில் காற்றால் விவசாயிகள் பலத்த நஷ்டமடைந்துள்ளனர்.

ஆலம்பச்சேரியைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், மழை பெய்து காற்று வீசி வாழைகள் சாய்ந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சூறைக்காற்று மட்டும் வீசி வாழைகள் காய்கள் பிடித்து அறுவடைக்கு தயார் நிலையில் சாய்ந்துள்ளன. இன்னும் ஒருமாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் வாழைகள் சாய்ந்ததால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதேபோல இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூர் கிராமத்தில் ஏற்பட்ட சூறைக்காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த சுப்பையா, ஆறுமுகம், ஜெயராமன், மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் 2 முதல் 5 ஏக்கர் வரையில் வாழை விளைவித்திருந்தனர்.

பலத்த சூறைக்காற்றால் இந்த பகுதியில் உள்ள ஏராளமான வாழைகள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. கிணற்று பாசனம் மூலம் வளர்க்கப்பட்ட வாழை, ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செய்தும் பலனின்றி போனது என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர். மேலும் அவர்கள் வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து தகுந்த நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story