குழந்தைகள் விற்பனை வழக்கில் காவலில் எடுத்த நர்சு உள்பட 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விடிய, விடிய விசாரணை
குழந்தைகள் விற்பனை வழக்கில் காவலில் எடுத்த நர்சு உள்பட 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
சூரமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர்(நர்சு) அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் அருள்சாமி, லீலா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தை விற்பனை புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, முருகேசன், அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு நாமக்கல் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, கைதான அமுதவள்ளியை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும், முருகேசன், அருள்சாமி ஆகியோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் அடங்கிய குழுவினர் இந்த வழக்கு தொடர்பாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். குழந்தைகள் விற்பனையில் இதுவரை கைதானவர்களை தவிர வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? தமிழகத்தை தவிர வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளதா?, என அவர்களிடம் கேட்டு அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அவர்கள் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாகவும், இதற்காக பெற்றோர்களிடம் பத்திரத்தில் எழுதி கையெழுத்து பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘குழந்தைகள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு தான் முழு விவரம் தெரிய வரும்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story