கள ஆய்வு நடத்திய பின்னரே முற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


கள ஆய்வு நடத்திய பின்னரே முற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 5:36 PM GMT)

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கு கள ஆய்வு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

புதுச்சேரி,

மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் முற்பட்ட வகுப்பினர் அதிக சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பாரதீய ஜனதா அரசு தனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் அவசர அவசரமாக முற்பட்ட சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தை கொண்டு வந்தது.

இதை எதிர்த்தால் நமக்கு இடங்கள் குறைந்துவிடுமோ என்று காங்கிரஸ் அமைதி காத்தது. ஆனால் இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே சமயம் மத்திய அரசு கொண்டு வந்த இந்த மசோதாவினை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அந்தந்த மாநில அரசை சார்ந்ததாகும் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு சிறைத்துறையில் காலியாக உள்ள வார்டன்களை நிரப்பும் பணியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த 10 சதவீத இடங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முற்பட்ட சாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இடஒதுக்கீடு கொடுப்பது தவறு இல்லை. அதை முறையாக செய்யவேண் டும். அதாவது புதுச்சேரியில் மொத்தம் எத்தனை சதவீதம் பேர் முற்பட்ட சாதியினர் உள்ளனர்? அதில் எத்தனை சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்பட வேண்டும்.

எனவே புதுச்சேரி அரசு முற்பட்ட சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கொடுக்க முன்வந்துள்ள இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும். இதுகுறித்து விரிவான களஆய்வு மற்றும் ஆலோசனை நடத்திய பின்னர் தேவைப்பட்டால் வழங்க முன்வர வேண்டும். இவைகளை செய்யாமல் தற்போதுள்ள நிலையிலேயே அவர் களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் சமூக நீதி கொள்கைக்கும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் விரோதமானதாகவே இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Next Story