சின்னாரில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலை கோனேரிப்பள்ளியை வந்தடைந்தது இன்று பெங்களூரு நோக்கி புறப்படுகிறது


சின்னாரில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலை கோனேரிப்பள்ளியை வந்தடைந்தது இன்று பெங்களூரு நோக்கி புறப்படுகிறது
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 6:42 PM GMT)

சின்னாரில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலை கோனேரிப்பள்ளியை வந்தடைந்தது. இந்த சிலை இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு நோக்கி புறப்படுகிறது.

ஓசூர், 

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெரிய லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் பல பிரச்சினைகளை சந்தித்து, கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு சிலையுடன் கூடிய லாரி வந்தது.

பின்னர் லாரி டயர்கள் வெடிப்பு பிரச்சினையாலும் மற்றும் லாரி செல்வதற்காக தற்காலிக மண் சாலை, பாலம் ஆகியவை அமைக்க வேண்டியும் 3 மாத காலம் கோதண்டராமர் சிலை, சாமல்பள்ளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் தற்காலிக பாலம் மற்றும் மண் பாதை அமைக்கப்பட்டு கடந்த 3-ந்தேதி, கோதண்டராமர் சிலை அங்கிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ஆனால், லாரி டயர்கள் பஞ்சர் ஆனதால் இம்மிடிநாயக்கனபள்ளி என்ற இடத்தில் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

பின்னர் டயர் மாற்றப்பட்டு அங்கிருந்து லாரி புறப்பட்டபோது, சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாததால் லாரியின் சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மண் சாலையை சமப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சிலை ஏற்பாட்டாளர்களுக்கும், சிலையை கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கோதண்டராமர் சிலை, சின்னாரிலேயே நிறுத்தப்பட்டது.

இதனிடையே, சிலை ஏற்பாட்டாளர்கள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமுக தீர்வு ஏற்பட்டதையடுத்து, நேற்று காலை சிலையுடன் லாரி சின்னாரில் இருந்து புறப்பட்டது. கொல்லப்பள்ளி, சூளகிரி ஆகிய ஊர்களை கடந்து மாலை கோனேரிப்பள்ளி என்ற இடத்திற்கு லாரி வந்தடைந்தது. பின்னர், சிலையுடன் லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் மீண்டும் சிலை அங்கிருந்து காமன்தொட்டி, பேரண்டபள்ளி, ஓசூர் வழியாக பெங்களூரு கொண்டு செல்லப்படும் என்று சிலை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சூளகிரி, சப்படி, கோனேரிப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள் திரண்டு வந்து கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்தனர்.

Next Story