வீடு புகுந்து திருட முயன்றதாக போலீசில் ஒப்படைக்கப்பட்ட இலங்கை அகதி திடீர் சாவு ஊத்தங்கரை அருகே பரபரப்பு


வீடு புகுந்து திருட முயன்றதாக போலீசில் ஒப்படைக்கப்பட்ட இலங்கை அகதி திடீர் சாவு ஊத்தங்கரை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2019 4:00 AM IST (Updated: 9 May 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இலங்கை அகதி திடீரென இறந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்தங்கரை,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று வேலைக்கு சென்று இருந்தார். அப்போது நேற்று மாலை அவருடைய வீட்டு பூட்டை 2 பேர் உடைத்து திருட முயன்றனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் 2 பேரும் தப்பியோடினர்.

இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தூத்துக்குடி மாவட்டம் தப்பாத்தி இலங்கை அகதி முகாமை சேர்ந்த கணபதி (வயது 53) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து போலீசார் கணபதியை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணபதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். வீட்டில் திருட முயன்றவர் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் திருட முயன்றதாக பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த இலங்கை அகதி திடீரென இறந்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

ஊத்தங்கரை அருகே உள்ள வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் முத்தாலயபுரம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த கணபதி என்பவர் மொபட்டில் வந்து திருட முயன்றார். அப்போது கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த ராமமூர்த்தி வீடு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றபோது கணபதி கடப்பாறையால் தாக்க முயன்றார். அப்போது அவர் ஒதுங்கி கொண்டார். பின்னர் கணபதி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். ராமமூர்த்தி கூச்சலிடவே ஊர் பொதுமக்கள் விரட்டி சென்று பஸ் நிலையம் அருகே அவரை பிடிக்க முயன்றனர். அப்போது பொதுமக்களை கணபதி தாக்கி உள்ளார். பின்னர் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கணபதி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பொதுமக்கள் அவரை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த கணபதியை பொதுமக்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு கணபதி சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில் இவர் மீது தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story