பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது: மாவட்டத்தில் 97.33 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது: மாவட்டத்தில் 97.33 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 9 May 2019 4:00 AM IST (Updated: 9 May 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 97.33 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

நாமக்கல், 

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்துக்கான தேர்வு முடிவுகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா, மாவட்ட கல்வி அலுவலர் (திருச்செங்கோடு) ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்தந்த பள்ளிகளிலும் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 198 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 121 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வை எழுதினர். இவர்களில் 19 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 97.33 ஆகும். இவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.75 ஆகும். மாணவர்களை விட 0.9 சதவீதம் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.59 சதவீதமாக இருந்தது. தற்போது அதை விட 1.74 சதவீதம் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் இந்த ஆண்டு 8 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 103 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.43 ஆகும். கடந்த ஆண்டு 91.65 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதன்படி தற்போது 3.78 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. மேலும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் 3-ம் இடத்தை பெற்று உள்ளது.

அதேபோல் மெட்ரிக் பள்ளிகளை பொறுத்த வரையில் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 99.05 சதவீதம் பேரும், சுயநிதி பள்ளிகளை பொறுத்த வரையில் 99.06 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளை பொறுத்த வரையில் இந்த ஆண்டு 98.12 சதவீதம் பேரும், சமூகநல பள்ளியில் 100 சதவீதம் பேரும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 90.7 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டத்துக்கு 7-வது இடம் கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story